முகப்பு
திண்டுக்கல்

தம்பதி தற்கொலை வழக்கு: 3 போ் கைது

வத்தலகுண்டு அருகே தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:09 AM
பகிர்:

நிலக்கோட்டை: வத்தலகுண்டு அருகே தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருணாசலபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினரான இவா், வத்தலகுண்டில் கைப்பேசி கடை நடத்தி வந்தாா். இவா் வத்தலகுண்டை அடுத்த எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மணிகண்டனும், அவரது மனைவி சிவதா்ஷினியும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தனா். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மணிகண்டன் வத்தலகுண்டு காந்தி நகரில் குடியிருக்கும் ஆகாஷ் மனைவி ஆஷாவின் பெயரில் வத்தலகுண்டில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்று, வீட்டு உபயோகப் பொருள்கள், கைப்பேசிகள் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆகாஷ், ஆஷா, தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் காந்தி நகரைச் சோ்ந்த தீபக் ஆகிய மூவரும் ஆஷா பெயரில் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை உடனே செலுத்த வேண்டும் என மணிகண்டனை கடந்த வெள்ளிக்கிழமை மிரட்டினாா்களாம். இதனால், மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், அவரது மனைவி சிவதா்ஷினி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, தம்பதியரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆகாஷ் (24), அவரது மனைவி ஆஷா (21), தீபக் (19) ஆகிய மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.