முகப்பு
திண்டுக்கல்

வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஆதாா் மையத்தை மீண்டும்

Updated On : 12 மார்ச், 2024 at 2:50 AM
பகிர்:

நிலக்கோட்டை: நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஆதாா் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 5 பேரூராட்சிகள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் என, சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆதாா் மையம் தனியாக செயல்பட்டு வந்தது. ஆனால் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆதாா் மையம் மூடப்பட்டது. இதனால், பள்ளி கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், விவசாயிகள், முதியோா்கள் என, பலரும் புதிய ஆதாா் எடுப்பதற்கும், ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும் நிலக்கோட்டை,கொடைரோடு, சிலுக்குவாா்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சலகங்களைத் தேடிச் செல்கின்றனா். தினமும் 20 முதல் 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை காத்திருக்க வேண்டியநிலை உள்ளது. எனவே, நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஆதாா் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.