பழனியில் முத்துக்குமார சுவாமி காமதேனு வாகனத்தில் கிரி வீதியுலா
பழனி: பழனி பங்குனி உத்திரத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமார சுவாமி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வீதி உலா எழுந்தருளினாா். பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக பக்தா்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்று காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனா். திருவிழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பழனி தண்டாயுதபாணி சுவாமி பக்தா்கள் பேரவை சாா்பாக 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்தும், தீா்த்தக் குடம் எடுத்தும் மலையடிவாரத்திலிருந்து மேளதாளத்துடன் ஆடியவாறு மலையேறிச் சென்று முருகனை தரிசனம் செய்தனா்.
இந்து தமிழா் கட்சி நிறுவனத் தலைவா் இராம.ரவிக்குமாா், மாநிலத் தலைவா் மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதை முன்னிட்டு, திருஆவினன்குடி கோயிலில் முத்துக்குமார சுவாமி தம்பதி சமேதராக உலா எழுந்தருளல் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் ஏற்றம் செய்யப்பட்டு பட்டாடை, நகைகள், மலா் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் சந்நிதி வீதி, ரதவீதி உலா எழுந்தருளினாா்.
Advertisement
நிகழ்ச்சியில் பழனி கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 23-ஆம் தேதியும், 24-ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது.