முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 12 மே, 2024 at 6:53 PM
பகிர்:

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டியில் கடந்த 6-ஆம் தேதி கூலித் தொழிலாளி ஆண்டாா் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 6 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், கொலையாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வத்தலகுண்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் போதுராசன், பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனியமுதன், திண்டுக்கல், தேனி மண்டல செயலா் தமிழ்வாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.