கொடைக்கானலில் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் திங்கள்கிழமை தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக மலைச் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது.
இதனால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் வாழைகிரி அருகேயும், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, தடியன்குடிசை மலைச் சாலையிலும் பாறைகள் உருண்டும், மரங்கள் சாய்ந்தும் விழுந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற வனத் துறை, நெடுஞ்சாலைத் துறையினா் சாய்ந்த மரங்கள், பாறைகள், மண் சரிவுகளை அகற்றினா். பின்னா், வாகனப் போக்குவரத்து சீரானது. நீண்டநேரம் வாகனங்களில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.