முகப்பு
திண்டுக்கல்

வரி செலுத்தாத கடைகள், வீடுகளின் குடிநீா் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு

Updated On : 13 மே, 2024 at 6:30 PM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கடை, வீடுகளின் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளை துண்டிக்க ஆணையா் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சியில், கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், நிலுவை வரிகளையும், நிகழ் நிதியாண்டிலுள்ள வரி இனங்களையும் வசூலிக்க கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும், வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகளைத் துண்டித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், சுமாா் ரூ.15 கோடி வரை நிலுவை வரி வசூலானது.

இதற்கிடையே மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், வரி வசூலிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நிலுவை வரிகளை வசூலிக்க நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நிலுவை வரிகளையும், 2024-25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களையும் வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வரி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கவும், வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்புகளை துண்டிக்கவும் ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.