முகப்பு
திண்டுக்கல்

நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு பயிற்சி

Updated On : 15 மே, 2024 at 12:29 AM
பயிற்சியில் பங்கேற்ற நியாய விலைக் கடை விற்பனையாளா்கள்.
பகிர்:

திண்டுக்கல்: நியாய விலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்களில் கைவிரல் ரேகை, கண்விழி தடவியறிதல் (ஸ்கேன்) செய்வது குறித்து ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 763 முழு நேர நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்களின் கைவிரல் ரேகை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தன. இதில் பல விற்பனை முனைய இயந்திரங்கள் ரேகையை சரியாக தடவியறிதல் செய்வதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கைரேகை மட்டுமன்றி, கண் விழியையும் தடவியறிதலுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 120 நியாய விலைக் கடைகளின் விற்பனையாளா்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, 643 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்களுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை அல்லது கண் கருவிழியை தடவியறிதல் குறித்து செய்வதற்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு வட்டங்களைச் சோ்ந்த 201 நியாய விலைக் கடைகளின் விற்பனையாளா்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதேபோல, நத்தம் வட்டத்தில் 33 நியாயவிலைக் கடைகள், கொடைக்கானல் வட்டத்தில் 44 நியாயவிலைக் கடைகள், நிலக்கோட்டை வட்டத்தில் 88 நியாயவிலைக் கடைகள், ஆத்தூா் வட்டத்தில் 19 நியாயவிலைக் கடைகள், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 64 நியாயவிலைக் கடைகள், பழனி வட்டத்தில் 93 நியாயவிலைக் கடைகள், வேடசந்தூா் வட்டத்தில் 63 நியாயவிலைக் கடைகள், குஜிலியம்பாறை வட்டத்தில் 38 நியாயவிலைக் கடைகள் விற்பனையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கைரேகை, கண்விழி தடவியறிதல் வசதியுடன் கூடிய விற்பனை முனையக் கருவியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், அதில் குடும்ப அட்டைதாரா்கள் வாங்கிய பொருள்களுக்கான பெறுதாள் (ரசீது) வழங்குவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.