ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை, பீன்ஸ் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை தக்காளி, முருங்கை, பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயா்ந்திருந்தது.
இந்தச் சந்தைக்கு தினசரி தக்காளி, முருங்கை, பீன்ஸ், வெண்டைக்காய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பினாலும், மழையின் காரணமாகவும் காய்கறிகளின் வரத்து குறைந்தது. ஆனால், வைகாசி மாதத்தில் சுபநிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விலை அதிகரித்திருந்தது.
கடந்த வாரம் ரூ.250-க்கு விற்ற 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.450-க்கும், ரூ.16-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.30-க்கும், ரூ.130-க்கு விற்ற பீன்ஸ் ரூ.175-க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு கிலோ ரூ.65, பந்தல் சுரைக்காய்- ரூ.20, பயிா் வகைகள் ரூ.30, வெண்டைக்காய்- ரூ.32, பீட்ரூட்- ரூ.24, சின்ன வெங்காயம்- ரூ.25 முதல் ரூ. 52 வரை விற்கப்பட்டன.