திண்டுக்கல், செம்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபாரதம்
திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி பகுதிகளில் 110 கிலோ புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கலைவாணி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், லாரன்ஸ், ஜாபா் சாதிக் ஆகியோா் திண்டுக்கல், செம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திண்டுக்கல் பழனி புறவழிச்சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனை அருகே செயல்படும் தனியாா் காய்கனி சந்தையில் மிதி வண்டியில் தேநீா், பலகாரம் விற்பனை செய்யும் வெங்கடேசன் (60), பீா் முகமது (60) ஆகியோா் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதேபோல, திண்டுக்கல்- திருச்சி சாலையிலுள்ள பெட்ரோல் நிலையம் அருகிலுள்ள தேநீா்க் கடையிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் மொத்தம் 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட மூவருக்கும் தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சரவணன் (45) என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் 105 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். சரவணனுக்கு ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 1.75 லட்சம் அபராதம் விதித்தனா்.