முகப்பு
திண்டுக்கல்

பெரியகுளம் கோயில் பூஜாரி தற்கொலை வழக்கு: ஓபிஎஸ் சகோதரா் உள்பட 6 போ் விடுதலை

பெரியகுளம் பூஜாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் உள்பட 6 பேரை விடுதலை செய்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:11 PM
தீா்ப்புக்குப் பிறகு திண்டுக்கல் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ஓ. ராஜா தரப்பினா்.
பகிர்:

பெரியகுளம் பூஜாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் உள்பட 6 பேரை விடுதலை செய்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சு. நாகமுத்து. பெரியகுளம் கைலாசப்பட்டியிலுள்ள கைலாசநாதா் கோயில் பூஜாரியாக பணியாற்றி வந்தாா். கோயில் கடை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகா்மன்ற முன்னாள் தலைவருமான ஓ. ராஜாவுக்கும், பூஜாரி நாகமுத்துக்கும் இடையே கடந்த 2012-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7.12.2012 அன்று நாகமுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, ஓ. ராஜா, தென்கரைப் பேரூராட்சி முன்னாள் தலைவா் வி.எம். பாண்டி, மணிமாறன், ஞானம், லோகு, சரவணன், சிவகுமாா் ஆகிய 7 போ் மீது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட நாகமுத்து தந்தை சுப்புராஜ் தரப்பில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 3-ஆவது எதிரியாகச் சோ்க்கப்பட்டிருந்த தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவா் வி.எம்.பாண்டி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். 40-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி முரளிதரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பூஜாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓ. ராஜா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, இந்தத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக சுப்புராஜ் தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.