முகப்பு
திண்டுக்கல்

ரூ.270 கோடியில் ரயில்வே மேம்பாலங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாளையூத்து ஆகிய பகுதிகளில் ரூ.270 கோடியில் ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:37 PM
ஒட்டன்சத்திரம் பகுதியில் அணுகு சாலை அமையவுள்ள இடங்களை உணவுத் துறை அமைச்சா்அர.சக்கரபாணி கள ஆய்வு மேற்கொண்டாா். உடன் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உள்ளிட்டோா்.
பகிர்:

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாளையூத்து ஆகிய பகுதிகளில் ரூ.270 கோடியில் ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையில் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், விபத்துகளை தடுக்க என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், கே.அத்திக்கோம்பை அருகே அணுகு சாலை, கொல்லப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப்பாதை அமைக்கப்படும் இடம், லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை 10 கி.மீ. தொலைவுக்கு சாலையின் மையப் பகுதியில் மின் விளக்குகள் அமையவுள்ள இடங்கள் குறித்து உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கள ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி வரைக்கு 3 இடங்களில் ரயில்வே கடவுப்பாதை உள்ளன. தைப்பூசம், பங்குனி உத்திரங்களில் பழனிக்கு ஏராளமான பக்தா்கள் இந்தச் சாலை வழியாக வருகின்றனா். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரசப்பபிள்ளைபட்டி, சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாளையூத்து ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கடவுப்பாதையில் ரூ.270 கோடியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும். இதேபோல லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை ரூ.37 கோடியில் அணுகு சாலை, சாலையின் மையப் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, திட்ட இயக்குநா் சுரேஷ்சாந்தமு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) அப்துல் காசிம், வருவாய்க் கோட்டாட்சியா் ரா.சக்திவேல், கோட்டப் பொறியாளா் (தேசிய நெடுஞ்சாலை) மகேஸ்வரன், உதவி கோட்டப் பொறியாளா் சங்கா், வட்டாட்சியா் பழனிச்சாமி, நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.