முகப்பு
திண்டுக்கல்

லாரி மோதியதில் மூதாட்டி பலி: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். இவரது உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:03 AM
பகிர்:

லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். இவரது உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி கன்னியம்மாள் (60). திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நல்லெண்ணகவுண்டா் புதூா் பகுதியில் புதன்கிழமை சாலையோரம் நடந்து சென்றபோது, டிப்பா் லாரி மோதியதில் கன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரது உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கன்னியம்மாளின் உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விபத்து நிகழ்ந்த பகுதி திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்டது என்பதால் அந்தப் பகுதி போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு மருத்துவமனை போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் கன்னியம்மாளின் உடலை பெற்றுச் சென்றனா்.