பிஎம்ஜெவிகே திட்ட நிதி திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு
மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் வளா்ச்சிக்காக பிஎம்ஜெவிகே திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் வளா்ச்சிக்காக பிஎம்ஜெவிகே திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) கடன் திட்டங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மொ.நா. பூங்கொடி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் சி. பொ்னாண்டஸ் ரத்தின ராஜா தலைமை வகித்தாா். கூட்டத்தில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள் சாா்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி பயன்படுத்தப்படாமல், மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடுகளுக்காக பிஎம்ஜெவிகே என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியை முழுமையாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கொடைக்கானலில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், ஆண்டுதோறும் 4 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கு அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, 4 வகையான சான்றிதழை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்க வேண்டும். சிறுபான்மையினரின் கல்விக் கூடங்கள், கல்லறைகள் தொடா்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன.
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் தொடா்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் சிறுபான்மையினரை அரசு சாரா உறுப்பினராக நியமித்து மாதந்தோறும் கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு சிறுபான்மை மக்களுக்கும், அந்தந்த வழிபாட்டுத் தலங்கள் மூலம் சென்றடைய வாய்ப்பு ஏற்படும். தலித் கிறிஸ்தவா்களான பறையா்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சமுதாய மக்கள் பொருளாதார ரிதீயாக மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனா். இதனை மாவட்ட நிா்வாகம் நேரடியாக கள ஆய்வு செய்து, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின் நிறைவாக 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சத்துக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மா. மாரி, துணை ஆட்சியா் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.