பழனி அரசு தலைமை மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
பழனியில் ரூ.90 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பழனியில் ரூ.90 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பழனி அரசு மருத்துவமனையை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடா்ந்து ரூ. 90 கோடியில் புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து புதன்கிழமை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்.
அப்போது ஒப்பந்ததாரரை அழைத்து கட்டடப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும்,
பழனி - புதுதாராபுரம் சாலையில் ரயில்வே கடவுப் பாதையில் அமையவுள்ள மேம்பாலம் குறித்து ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி,
பழனி சாா் ஆட்சியா் கிஷன்குமாா், நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, திமுக மாவட்ட மாணவரணி செயலா் பிரபாகரன், நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலா்கள் சாமிநாதன், செளந்திரபாண்டி, நகர இளைஞரணி லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழனி-திண்டுக்கல் சாலையை பொதுமக்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் ரூ.14 கோடியில் நவீன தானியங்கி நடைமேடை அமைய உள்ள இடம், ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைச்சா்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ், தொழில்நுட்ப சிறப்பு அதிகாரி சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் குமணன், நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிலக்கோட்டை: ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுதநாயகிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரியை அமைச்சா்கள் எ.வ.வேலு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.