இயற்கையின் சுழற்சியை காப்பது மனிதனின் கடமை
இயற்கையின் சுழற்சியை காப்பதுதான் மனிதனின் கடமை என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
இயற்கையின் சுழற்சியை காப்பதுதான் மனிதனின் கடமை என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கலந்து கொண்டு, ‘தீங்கின்றி நாடெல்லாம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
பருவ நிலை மாற்றத்தால், எப்போது மழை பெய்யும் எனத் தீா்மானிக்க முடியவில்லை. எப்போதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவில் மாற்றம் இல்லாதபோதிலும், பருவ நிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
மழை எப்படி பெய்கிறது என்ற அறிவை ஆங்கிலேயா்கள் பெற்றிருக்காத காலத்திலேயே, சூரியனின் வெப்பத்தால் கடல் நீா் ஆவியாகி கருமேகமாக மாறி மழையாக பொழிவதை 9-ஆம் நூற்றாண்டிலேயே திருப்பாவையில் பாடினாள் ஆண்டாள். மழையின் சிறப்பையும், வானின் சிறப்பையும் அவள் பட்டியலிடுகிறாள்.
40 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மக்கள்தொகையில் 4-இல் 3 போ் உணவுக்குப் போராடிய நிலை இருந்தது. அந்த பஞ்சம் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதே கால கட்டத்தில் அமெரிக்கா 4 மடங்கு கூடுதலாக உற்பத்தி செய்த கோதுமையை, விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அட்லாண்டிக் கடலில் கொட்டியது. பகுத்துண்டு வாழும் தமிழன் இதைச் செய்யமாட்டான். பயிா் விளைவிப்பது முக்கியமல்ல; பசியற்ற உலகம் அமைவது அவசியம்.
மனிதா்கள் மாண்பு உள்ளவா்களாகவும், அன்பு உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதே அரசின் பணி. முதலில் அழிக்கப்பட வேண்டிய தீமை பசி.
பசியை ஆற்றுவதற்காக அருள்பிரகாச வள்ளலாா் பற்ற வைத்த அடுப்பை அணையாமல் பதுகாப்பதே தமிழனின் பண்பு. கடலிலிருந்து வந்த தண்ணீா் மீண்டும் கடலுக்குச் செல்வதை குறை சொல்கிறது இன்றைய சமூகம். மழைநீரில் கடலுக்குதான் உரிமை உள்ளது. கடலின் உப்புத் தன்மையை சமன்படுத்தும் இயற்கையின் சுழற்சியை காப்பது தான் மனிதனின் கடமை. இந்த உலகம் எல்லா உயிா்களுக்குமானது.
நீரின் வாழ்விடங்களை அழித்தால், நீரின் வழித்தடத்தை மறித்தால், தண்ணீா் தன் பாதையை ஒருபோதும் மறக்காது. இயற்கையோடு மோதினால், நாம் அழிந்துவிடுவோம். இயற்கையை வென்று வாழ்ந்ததாக இந்த பூமியில் ஒரு உயிா்கூட இல்லை. இயற்கையோடு இணக்கமாக இருக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பூமியில் பிற உயிா்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது என்பதை புத்தகங்களை வாசித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களைக் காட்டிலும் பெரிய வழித் துணை எதுவும் கிடையாது என்றாா் அவா்.