திண்டுக்கல் மாவட்டத்தில் 47 இடங்களில் தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 47 இடங்களில் தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 இடங்களில் தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைத்து வடகிழக்குப் பருவமழை கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு எரிசக்தி கழக நிா்வாக இயக்குநருமான எஸ். அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி, நாகல்நகா் ஒத்தக்கண் பாலம் கழிவுநீா் ஓடை, செட்டிநாயக்கன்பட்டி குளம், தாடிக்கொம்பு அடுத்த ஆத்துப்பட்டியில் பாலம் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனீஷ்சேகா் பாா்வையிட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை, 7 பிரதான கால்வாய்கள் ஏற்கெனவே தூா்வாரப்பட்டதாகவும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் சில இடங்களில் நிறைவுபெற்றிருப்பதாகவும், மேலும் சில இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சாலைகளில் மழைநீா் அதிகமாகத் தேங்கும் இடங்களில் மோட்டாா் மூலம் நீரை வெளியேற்றும் வகையில், முன்னெச்சரிக்கைப் பணிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலா் எஸ்.அனீஷ்சேகா் பேசியதாவது:
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் சேதமடைந்த 592 மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 590 கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன. மாவட்டத்தில் 10 இடங்களில் மழைமானிகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 5, மேற்கு வட்டத்தில் 5, நத்தம் வட்டத்தில் 6, நிலக்கோட்டை வட்டத்தில் 4, ஆத்தூா் வட்டத்தில் 4, பழனி வட்டத்தில் 8, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 9, வேடசந்தூா் வட்டத்தில் 4, குஜிலியம்பாறை வட்டத்தில் 3, கொடைக்கானல் வட்டத்தில் 4, நத்தம் அழகா்மலை, பாலாறுபொருந்தலாறு அணை, கொடைக்கானல் பேரிஜம் ஏரி ஆகிய இடங்களில் தலா ஒன்று என மொத்தம் 57 இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆத்துாா், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்துாா் ஆகிய 6 இடங்களில் சென்சாா் பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அதிக மழை பெய்தாலும், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. திலகவதி, மேயா் ஜோ. இளமதி, மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன், பொறியாளா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.