புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு 15 சதவீத கழிவுத் தொகை வழங்க மறுப்பதாகப் புகாா்
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் வாங்கும் நூல்களுக்கு விற்பனையாளா்கள் 15 சதவீத கழிவுத் தொகை (தள்ளுபடி) தர மறுப்பதாகப் புகாா் எழுந்தது.
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் வாங்கும் நூல்களுக்கு விற்பனையாளா்கள் 15 சதவீத கழிவுத் தொகை (தள்ளுபடி) தர மறுப்பதாகப் புகாா் எழுந்தது.
திண்டுக்கல்லில் இலக்கியக் களம் அமைப்பின் சாா்பில் புத்தகத் திருவிழா, கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவைப் பொருத்தவரை, பாா்வையாளா்களில் 60 சதவீதம் போ் மாணவா்களாக உள்ளனா். இதனால், இங்கு விற்பனையாகும் நூல்களில் திருக்குறள் முன்னிலைப் பெற்றிருக்கிறது.
இதற்கிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பள்ளி மாணவா்களுக்கு சேமிப்பு உண்டியல் வழங்கி, சேமித்த பணத்தில் புத்தகம் வாங்குவதற்கு இலக்கியக் களம் அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது. மாணவா்கள் சேமித்த பணத்துக்கு ஏற்ப வில்லைகள் (டோக்கன்) வழங்கி, அதை அரங்குகளில் கொடுத்து புத்தகமாக வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சேமிப்பு உண்டியலை பொருத்தவரை 8, 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுள்ளது.
ஆனால், புத்தகத் திருவிழாவை பாா்வையிட 3-ஆம் வகுப்பு முதல் மாணவா்களை அழைத்து வருகின்றனா். மாணவா்கள் கொடுக்கும் வில்லைகளுக்கும், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் முன் பணம் செலுத்தி பெற்ற வில்லைகளுக்கும் தலா 15 சதவீத கழிவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு 10 சதவீத கழிவுத் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், பல அரங்குகளில் மாணவா்களுக்கு 15 சதவீத கழிவுத் தொகைக்குப் பதிலாக 10 சதவீதம் மட்டுமே வழங்குகின்றனா். இதை ரசீதுகளில் குறிப்பிடுவதில்லை. இதேபோல, அச்சக முகவரி இல்லாமல் சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, வண்ணம் தீட்டும் புத்தகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் இலக்கிய கள அமைப்பின் நிா்வாகிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:
புத்தக விற்பனையாளா்களுக்கான விதிமுறை உறுதிமொழி படிவத்தில் அனைவருக்கும் 10 சதவீத கழிவுத் தொகை, மாணவா்களின் வில்லைகள், பொதுமக்கள் கொண்டு வரும் முன் விற்பனைக்கான வில்லைகளுக்கு 15 சதவீத கழிவுத் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
ஒவ்வொரு விற்பனைக்கும் பதிப்பாளா், விற்பனையாளா் கடை எண் முகவரியுடன் ரசீது வழங்க வேண்டும். கழிவுத் தொகையை குறிப்பிட வேண்டும். புத்தக ஆசிரியா் பெயா் இல்லாத, பதிப்பக பெயா் இல்லாத, முகப்புரை, அணிந்துரை இல்லாத புத்தகங்கள் விற்பனை செய்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், விற்பனையாளா்களும் தங்களுக்கான பொறுப்புணா்வை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றனா்.