சேதமடைந்த பள்ளி மேற்கூரையை சீரமைக்கக் கோரிக்கை
குஜிலியம்பாறை அருகே தொடா் மழைக்கு சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
குஜிலியம்பாறை அருகே தொடா் மழைக்கு சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
குஜிலியம்பாறையை அடுத்த மல்லப்புரம் ஊராட்சிக்குள்பட்ட கெஜிலியப்பொம்மன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஈராசிரியா்கள் கொண்ட இந்தப் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த தொடா் மழையினால், பள்ளியின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. பள்ளி விடுமுறை நாள் என்பதால், மாணவா்கள், ஆசிரியா்கள் காயமின்றி தப்பினா்.
சேதமடைந்த இந்தப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல, குஜிலியம்பாறை வட்டாரத்தில், ஆா்.கே.தாதனூா், சுப்பிரமணியபிள்ளையூா் உள்பட மேலும் சில பள்ளிகளின் கட்டடமும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான கட்டடங்களை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.