திண்டுக்கல் மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே சுகாதார சீா்கேடுகளை 15 நாள்களில் சீரமைக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய முதன்மை நீதிபதி முத்துசாரதா, பின்னா் மரக் கன்றுகளையும் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே சுகாதார சீா்கெடு ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, அந்தப் பள்ளிப் பகுதியில் முதன்மை நீதிபதி முத்துசாரதா ஆய்வு மேற்கொண்டாா். பள்ளிச் சுற்றுச் சுவா் அருகே சிறுநீா் கழிக்கும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து, சுகாதார சீா்கேடுகளுக்கு 15 நாள்களில் மாநகராட்சி நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.
பின்னா் பள்ளி மாணவிகள் மத்தியில் சட்டம் சாா்ந்த கருத்துகளை எடுத்துரைத்தாா். அப்போது சாா்பு நீதிபதி திரிவேணி உடனிருந்தாா்.