முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:48 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பிரதான சாலை, கமலா நேரு மருத்துவமனை சாலை, ஆா்.எஸ்.சாலை, சாலை ரோடு ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் இடம் கிடைக்காத வியாபாரிகள், திருச்சி சாலையில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனா். தற்காலிகக் கடைகளில் ஆயத்த ஆடைகள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மழை அங்கி (ரெயின் கோட்), பாய், தலையணை என அனைத்து வகையான பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல்லில் கடந்த 4 நாள்களாக மழை இல்லாததால், தற்காலிகக் கடைகளில் 4 நாள்களும் பொதுமக்கள் குவிந்தனா்.

தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால், புதன்கிழமை காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிகக் கடைகள் குறைவாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. ஆனால், இந்த முறை திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகளும், மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநில வியாபாரிகளும் அதிக அளவில் கடை அமைத்திருந்தனா்.

போக்குவரத்து நெரிசல்: சாலை ரோடு, பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை நிறுத்தவதற்கு டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் சாலை ரோடு பகுதியிலுள்ள கடைகள், வங்கிகள் முன் நிறுத்தப்பட்டன. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்கின. பாதசாரிகள் கூட எளிதாகக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பழனி சாலை வழியாக செல்லும் பேருந்துகள், பிரதான சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பிற்பகலுக்குப் பிறகு மாற்றுவழியில் இயக்கப்பட்டன.

புத்தக நிலையங்களில் பட்டாசு கடைகள்: திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள புத்தக நிலையங்கள், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகப் பட்டாசுக் கடைகளாக மாற்றப்பட்டன. இதேபோல, வழக்கத்துக்கு மாறாக பல்வேறு இடங்களிலும் பட்டாசுக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்பட்டது.

60 முதல் 80 சதவீதம் சலுகையுடன் சிவகாசி விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக கூடுதல் விலைக்கே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டபோதிலும், பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.