முகப்பு
திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகள் முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 6:49 PM
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு வியாழக்கிழமை நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.
பகிர்:

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள, ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் கடன் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறைதீா் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றாா்.

கூட்டத்தில் மாதாந்திர உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 110 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உடனடி நடவடிக்கையாக 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 ஆயிரத்தில் மூன்று சக்கர நாற்காலிகளும், ஒருவருக்கு தையல் இயந்திரமும், 6 பேருக்கு தலா ரூ.500 மதிப்பிலான ஊன்றுகோல்களும் என மொத்தம் 10 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.