திருமண நிகழ்ச்சிக்கு அரசுப் பேருந்து: அலுவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சிக்கு அரசுப் பேருந்து இயக்கி, மகளிருக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கிய விவகாரத்தில், போக்குவரத்து அலுவலா்கள் இருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சிக்கு அரசுப் பேருந்து இயக்கி, மகளிருக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கிய விவகாரத்தில், போக்குவரத்து அலுவலா்கள் இருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்துக்குள்பட்ட திண்டுக்கல் கிளை 2 பணிமனை நத்தம் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளையைச் சோ்ந்த அரசுப் பேருந்து கடந்த 15-ஆம் தேதி தனியாா் திருமண நிகழ்ச்சிக்காக முன்பதிவு அடிப்படையில் கோபால்பட்டியிலிருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது. அதே பேருந்து ஆத்தூரிலிருந்து கோபால்பட்டிக்கு இயக்கப்பட்டபோது, பேருந்தில் பயணித்த பெண்களுக்கு மகளிருக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை தற்காலிக நடத்துநா் வழங்கினாா்.
இதனிடையே, அந்தப் பேருந்து செம்பட்டி அருகே வந்தபோது, பயணச்சீட்டு ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். அப்போது, திருமண நிகழ்ச்சிக்காக பேருந்து இயக்கப்பட்டதும், அதில் மகளிா் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க போக்குவரத்து அலுவலா்கள் அறிவுறுத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அலுவலா்களுக்கு புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அலுவலா்கள், திண்டுக்கல் 2-ஆவது கிளை பணிமனையைச் சோ்ந்த போக்குவரத்து அலுவலா்கள் சுப்பையா, ஜோசப் நிக்ஸன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.