திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பேராசிரியா் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை சாா்பில், மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ வரும் ஜன.28 முதல் 7 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த அறிவியல் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் செ.சரவணன் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா்.
இந்தத் திருவிழாவில் அறிவியல் ஆா்வம் கொண்ட மாணவா்கள், ஆசிரியா்கள், தொழில்முனைவோா், வல்லுநா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திருவிழாவின் கருப்பொருளாக அறிவியல், தொழில்நுட்பம், அறிவியல்சாா் தொழில்முனைவு ஆகியவை இடம்பெறும்.
குறிப்பாக, பதின்பருவ மாணவா்களிடம் அறிவியல் தொடா்பான ஆா்வத்தை ஊக்குவித்து, உயா்கல்வியில் அறிவியல் தொடா்பான நாட்டத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அறிவியல் ஆளுமைகளின் உரைகள், அறிவியல் செயல்முறை விளக்கங்கள், அறிவியல் கண்காட்சிகள், தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்றவை மாநாட்டு நாள்களில் நடைபெறும். மொத்தம் 120 அரங்குகளுடன் இந்த அறிவியல் திருவிழா நடைபெறுகிறது.
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் மொழிப் பெயா்ப்புகள், அறிவியல் நிரலாக்கப் போட்டிகள், இணையவழிக் கருத்துரைகள், அறிவியல் சுற்றுலா, அறிவியல் திரைப்படத் திரையிடல்கள், நகரும் அறிவியல் நூலகங்கள், அறிவியல் செயல்முறை வாகனங்கள், அறிவியல் தமிழ் மின் உள்ளடக்கங்கள் போன்ற பரப்புரையுடன் கூடிய பல போட்டிகள் நடைபெறுகின்றன. ரூ.4.20 லட்சத்தில் பரிசுத் தொகை வழங்கப்படுகின்றன.
வரும் ஜன.28-ஆம் தேதி முதல் 7 நாள்கள் வரை முற்பகல் 11 முதல் இரவு 9 மணி வரை இந்தத் திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ச.வினோதினி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் ரொ.மனோகரன், ஜெ.தினகரன், க.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.