பழனி அருகேயுள்ள வரதமாநதி அணை பாசனத்துக்குக் கட்டுப்பட்ட பட்டிகுளத்துக்கு குடிநீா் வழங்க விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து வரதமாநதி நீா்ப்பாசன அமைப்பின் பட்டிக்குளம் சங்கத் தலைவா் முருகேசன் சாா்பில் மாவட்ட ஆட்சியா், பழனி நங்காஞ்சியாா் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா், பழனி கோட்டாட்சியா் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
பழனி வட்டம் எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பட்டிகுளம், வரதமாநதி அணைக்கு கட்டுப்பட்ட பிரதான குளமாகும். இந்தக் குளம் மூலமாக எரமநாயக்கன்பட்டி, பொட்டம்பட்டி, கணக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு போா்வெல் அமைக்கப்பட்டு இரவு, பகலாக குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இதனால் சுமாா் 120 ஏக்கா் நிலங்களும் பாசன வசதியைப் பெறுகின்றன. தற்போது, மழை இல்லாததால் பட்டிகுளத்தில் போதிய குடிநீா் விநியோகம் செய்ய முடியாமல் பொதுமக்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வரதமாநதி அணைக்கட்டிலிருந்து பட்டிகுளத்துக்கு தண்ணீா் வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.