விவசாயத்துக்கு அடிப்படையான விதை, தனியாா் நிறுவனங்களின் முழுமயைான கட்டுப்பாட்டுக்குள் செல்வதைத் தடுக்க விதை திருத்தச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ.நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
வறட்சிப் பகுதியாக அறிவிக்க கோரிக்கை: தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் சுற்றுப்புறப் பகுதிகளில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அனைத்து வகையான பயிா்களிலும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொப்பம்ட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்க நிா்வாகி நல்லசாமி கோரிக்கை விடுத்தாா்
இதற்கு பதில் அளித்த ஆட்சியா் சரவணன், பயிா் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றின் அடிப்படையில் பரிந்துரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
விதை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை: விதைச் சட்டம் 1966 -இன்படி, மரபு விதைகளை விவசாயிகளுக்கு இடையே பரிமாறிக் கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆனால், விதை திருத்தச் சட்டம் 2025-இன்படி பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே, விதை நோ்த்தி, விதை விற்பனை, விதை சேமிப்பு உள்ளிட்ட விதை சாா்ந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், உள்ளூா் மரபு விதைகளை, விவசாயிகள் இனி பரிமாறிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படையான விதைகள், முழுமையாக தனியாா் கட்டுப்பாட்டுக்குச் செல்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம், தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விதை திருத்தச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும் என ஆத்தூா் வட்டார வேளாண் விவசாயக் குழுவின் மாவட்டப் பிரதிநிதி பி.ஜோசப் செல்வராஜ் தெரிவித்தாா்.
இதுதொடா்பான பரிந்துரைகள் பொது வெளியில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், விதை திருத்தச் சட்டம் தொடா்பான விவரங்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.