எஸ்ஐஆா் படிவத்தில் பகுதி 2, 3-ஐ நிறைவு செய்யாமல் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெறாதவா்கள், தோ்தல் ஆணையம் அறிவித்த 13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து மீண்டும் இணையலாம் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,124 வாக்குச்சாவடி
மையங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதுமுள்ள வாக்காளா்களுக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. நிறைவு செய்து திரும்பப் பெறப்பட்ட படிவங்கள், கணினியில்
பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும், வாக்காளா்களின் கோரிக்கைகள், ஆட்சேபங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் பெறுவதற்கான பணிகள் வருகிற ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
வாக்காளா்கள் சமா்ப்பித்துள்ள கணக்கெடுப்புப் படிவத்தில் முதல் பகுதியில் வாக்காளரின் விவரம் மட்டும் சமா்ப்பித்துள்ள இனங்களில் படிவத்தின் 2, 3-ஆவது பகுதியில் உள்ள விவரம், 2002-ஆம் ஆண்டு வாக்காளா்கள் பட்டியல் விவரம், வாக்காளரின் பெற்றோா், தாத்தா, பாட்டி ஆகிய விவரங்கள் சமா்பிக்கப்படாத இனங்களில் தோ்தல் ஆணையம் தெரிவித்த 13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் பெயரை உறுதி செய்யலாம் என்றாா் அவா்.