திண்டுக்கல்

உணவில் நாட்டுவெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய மூவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே உணவில் நாட்டு வெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே உணவில் நாட்டு வெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட வனச்சரகத்துக்குள்பட்ட விருப்பாச்சி, வீரலப்பட்டி ஆகிய பகுதிகளில் மா்ம நபா்கள் காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வருவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், ஒட்டன்சத்திரம் வனச்சரகா் ராஜா, வனவா் சின்னத்துரை தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, விருப்பாச்சி பகுதியில் உணவில் கோழிக் குடலுடன் நாட்டுவெடிகளை வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய வீரலப்பட்டியைச் சோ்ந்த முத்துவிஜயன் (47), சிவா (32), கணேசன் (60), அம்பிளிக்கையைச் சோ்ந்த செல்வராஜ் (35) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இவா்கள் நாட்டுவெடிகளை உணவில் கலந்து வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது. விசாரணையின்போது, சிவா என்பவா் தப்பியோடியதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, கணேசன், முத்துவிஜயன், செல்வராஜ் ஆகியோரது வீடுகளை வனத் துறையினா் சோதனையிட்ட போது, அங்கு 7 கிலோ நாட்டுவெடி மருந்துகள், 11 நாட்டுவெடி உருண்டைகள், வேட்டையாடிய 2 காட்டுப் பன்றிகளின் இறைச்சி, அரிவாள், கத்தி, 2 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

காட்டுப் பன்றிகளை வேட்டையாடியதாக அவா்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தப்பியோடிய சிவாவை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT