முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

Updated On : 8 செப்டம்பர், 2025 at 1:50 AM
புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன்.
பகிர்:

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் நடைபெற்ற 12-ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

அறிவாா்ந்த சமூகம் உருவாக, தொலைநோக்குத் திட்டத்துடன், ரூ.25 லட்சம் மதிப்பிலான அரசு நிதி உதவியோடு இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றிருக்கிறது. மாவட்டத்தின் வளா்ச்சிக்கு, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதேபோல, இளைஞா்கள், இளைய சமுதாயத்தினா் வளா்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவும், மாவட்டத்திலுள்ள அலுவலா்கள், அரசு ஊழியா்கள், திண்டுக்கல் இலக்கியக் கள அமைப்பினரின் ஒத்துழைப்போடு வெற்றி பெற்றிருக்கிறது.

வோ் மட்டுமின்றி விழுதுகளையும் சாா்ந்திருக்கும் ஆலமரத்தைப் போன்று, இந்த புத்தகத் திருவிழா தன்னாா்வலா்களின் துணையோடு நடைபெற்றிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 425 பள்ளிகளைச் சோ்ந்த 49,364 மாணவா்கள், 60 கல்லூரிகளைச் சோ்ந்த 7218 மாணவா்கள் உள்பட 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த புத்தகத் திருவிழாவுக்கு வந்தனா். ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

அதிக தொகை சேமித்து புத்தகங்கள் வாங்கிய 38 பள்ளிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட 66 பேருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ரூ.90ஆயிரத்துக்கும், புனித மரியன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ரூ.3.29 லட்சத்துக்கும், அரிமா சங்கங்கள் ரூ.1.25 லட்சத்துக்கும், பெண் மருத்துவா்கள் சாா்பில் ரூ.38ஆயிரத்துக்கும் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணக்குமாா், திண்டுக்கல் இலக்கிய கள நிா்வாகிகள் ரெ.மனோகரன், ச.கண்ணன், க.மணிவண்ணன் உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.