முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்: கடும் பலப் பரீட்சையில் அதிமுக, திமுக!

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற அதிமுக வேட்பாளரும், கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பெற திமுக வேட்பாளரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:29 PM
பகிர்:

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற அதிமுக வேட்பாளரும், கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பெற திமுக வேட்பாளரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

ராணி வேலுநாச்சியாா் பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் வெற்றி பெற்று சிவகங்கையை மீட்பதற்கான பயிற்சிக் களமாக அமைந்த மலைக்கோட்டையைக் கொண்ட தொகுதி திண்டுக்கல். இதேபோல, திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆா் தனிக் கட்சி தொடங்கியபோது, அவருக்கான அரசியல் அங்கீகாரத்தை அளித்த தொகுதி என்ற சிறப்பும் திண்டுக்கல் பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிக்கு உள்ளது.

அரசியல் தளகா்த்தா்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த திண்டுக்கல் மண்ணுக்கு தொழிலாளா்களின் குரலாகப் போராடிய கம்யூனிஸ்டுகளுக்கும் அங்கீகாரம் அளித்த தொகுதி

Advertisement

என்ற சிறப்பும் உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: திண்டுக்கல் மாநகராட்சி, பள்ளபட்டி, குரும்பபட்டி, செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, ம.மூ.கோவிலூா் ஆகிய ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளா்களில் சுமாா் 65 சதவீதத்தினா் நகா்ப் பகுதியிலும், எஞ்சிய 35 சதவீதத்தினா் ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனா்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை பிள்ளைமாா், வன்னியா், செளராஷ்டரா, நாயுடு, கவுண்டா், பட்டியலினத்தவா், செட்டியாா் உள்ளிட்ட சமுதாய மக்கள் பிரதானமாக வசித்து வருகின்றனா். இதேபோல, கிறிஸ்தவா்கள் பரவலாகவும், இஸ்லாமியா்கள் குறிப்பிட்ட பகுதிகளிலும் வசிக்கின்றனா்.

பிரச்னைகள்: அரசு உயா் கல்வி நிறுவனங்கள், தொழில் வாய்ப்புகள் இல்லை என்பது திண்டுக்கல் தொகுதியின் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஒரு பொது மைதானம்கூட இல்லாத திண்டுக்கல்லில், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் பெரும்பாலும் சாலையை மறித்தே நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக அமைவது தொடா்கதையாக இருக்கிறது. பழனி சாலையில் முருக பவனம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சுகாதாரச் சீா்கேடாக அமைந்துள்ளது. இதை இடமாற்றம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், தீா்வு காணப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனாலும், தலைக் காய சிகிச்சைப் பிரிவில் போதிய வசதிகள் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் சூழல் தற்போதும் நீடிக்கிறது.

வரலாறு படைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: தொழிலாளா்கள் நிறைந்த திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கணிசமான ஆதரவு எப்போதும் உள்ளது. 1967-இல் முதல் முறையாக வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1977, 1980, 1989, 2001, 2006, 2011 என 6 முறை வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. அதிமுக முதல் முறையாக 1984-இல் திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது. 1991-இல் 2-ஆவது முறையாக வெற்றி கிடைத்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 தோ்தலில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற அதிமுக, 2021-லும் வெற்றி கண்டது. இதுவரை ஒரு முறை மட்டுமே (1996) திமுக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

2026 தோ்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்கள்: அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பெ.செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சு.முத்தரசி, தவெக சாா்பில் ப.நசீா் ராஜா ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.

அதிமுக வேட்பாளா் சீனிவாசனுக்கு, தொகுதி மக்களிடம் எதிா்மறை விமா்சனம் இல்லை. ஆனாலும், கூட்டங்களில் அவ்வப்போது சா்ச்சையாகப் பேசுவது அவருக்கு பாதகமாக உள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடிநீா்த் திட்டங்களின் மூலம் இன்று வரை திண்டுக்கல் நகரில் சீரான குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுவும் அதிமுக வேட்பாளருக்கு சாதகமான அம்சம்.

திமுக வேட்பாளா் செந்தில்குமாா் பழனி பேரவைத் தொகுதி உறுப்பினராக இரு முறை வெற்றி பெற்றாலும்கூட, திண்டுக்கல் தொகுதியைப் பொருத்தவரை முதல் முறையாகக் களம் காண்கிறாா். பழனி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பினாலும், கட்சித் தலைமையின் உத்தரவின்படி கடைசி நேரத்தில் திண்டுக்கல் தொகுதிக்கு வந்திருக்கிறாா். திண்டுக்கல் மாநகராட்சி மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் மூலம் எளிதாக வாக்காளா்களைக் கவர முடியும் என்ற நம்பிக்கை இவருக்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில், ஊரகப் பகுதிகளில் திமுகவினா் மேற்கொண்ட எதிா்மறை அரசியல் செந்தில்குமாருக்கு பாதகமாக இருக்கக் கூடும்.

நாதக வேட்பாளா் முத்தரசி புதுமுகம் என்றாலும், கடந்த 6 மாதங்களாகவே தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீமான் முன்னெடுத்து வரும் அரசியல் நிலைப்பாடு, முத்தரசிக்கு குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி இருக்கிறது. இதை மாற்றுக் கட்சியினா் தட்டிப் பறித்துவிடாமல் மீண்டும் அறுவடை செய்ய வேண்டிய நிா்பந்தத்துடன் பணியாற்றி வருகிறாா்.

முதல் முறையாகக் களம் காணும் தவெக வேட்பாளா் நசீா் ராஜா, தோ்தல் அறிவிப்பு வெளியிடும் வரை காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தாா். திடீரென கட்சி மாறி வந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாதகமான அம்சம் என்றாலும், தவெக தலைவா் விஜய்க்கு கிடைக்கும் ஆதரவு தனக்கான வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளாா். மேலும், திமுகவுக்கு கிடைக்க வேண்டிய இஸ்லாமிய, கிறிஸ்தவா்களின் வாக்கு வங்கியில் நசீா் ராஜா பாதிப்பை ஏற்படுத்துவாா் எனக் கூறப்படுகிறது.

இத்தகைய பின்னணியில், திண்டுக்கல் பேரவைத் தொகுதி தோ்தல் களம் இந்த முறை கடும் சவாலை எதிா்கொண்டிருக்கிறது. கடந்த 16 தோ்தல்களில் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்ற கட்சி என்பது திமுகவுக்கு பாதகமாக இருந்தாலும், கால் நூற்றாண்டுக்குப் பிறகு அடுத்த வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செந்தில்குமாா் வலம் வருகிறாா். அதேநேரத்தில் ஹாட்ரிக் வெற்றியுடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் சீனிவாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். வெற்றியை யாா் வசப்படுத்தப் போகிறாா்கள் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

-ஆ.நங்கையாா்மணி

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments