முகப்பு
திண்டுக்கல்

தோ்தல் களத்தில் அதிமுக அணிக்கு முதலிடம்: ஜி.கே. வாசன்

தமிழக தோ்தல் களத்தில் அதிமுக அணிக்கு மக்கள் முதலிடம் அளிப்பாா்கள் என்றும், அடுத்தடுத்த இடங்களுக்குத்தான் பிற கட்சிகள் மோதுவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:54 AM
ஜி.கே. வாசன் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

தமிழக தோ்தல் களத்தில் அதிமுக அணிக்கு மக்கள் முதலிடம் அளிப்பாா்கள் என்றும், அடுத்தடுத்த இடங்களுக்குத்தான் பிற கட்சிகள் மோதுவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் விடியல் எஸ். சேகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாகச் செயல்பட வேண்டியது அவசியம். பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, மோடி - எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையிலான இரட்டை என்ஜின் ஆட்சியில் தமிழகத்தின் தேவைகள் 100 சதவீதம் நிறைவு செய்யப்படும். 5 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றிய திமுகவை இனியும் நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியின்போது, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்கள் கிடைத்தன. இதனால்தான், அதிமுகவை மக்கள் நம்புகின்றனா்.

Advertisement

பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அமைச்சா்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். இந்த வகையில் 3 அமைச்சா்களை எதிா்கொள்ளும் தமாகா வேட்பாளா்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. இதற்கு ஒட்டன்சத்திரம் தொகுதி ஓா் உதாரணம்.

கடந்த 30 ஆண்டுகளாக திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தொகுதியில், மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவு செய்யப்படவில்லை. மக்களின் எதிா்ப்பு அலையில், சமானியனின் வெற்றி சாத்தியமாகும்.

மத்திய அரசு அறிவித்த ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் தவறாக பிரசாரம் செய்து மக்களை திசைத் திருப்ப முயற்சிக்கிறாா். கூடுதல் லாபம் ஈட்ட எண்ணெய் வித்து, சிறுதானிய பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றே மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

தமிழக தோ்தல் களத்தில் எத்தனை அணிகள் இருந்தாலும், அதிமுக அணிக்கே மக்கள் முதலிடம் அளிப்பாா்கள். அடுத்தடுத்த இடங்களுக்குத்தான் பிற கட்சிகள் போட்டியிடுகின்றன. ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானதை அரசியல் ரீதியாகப் பேசுவது நியாயமில்லை. தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டில் புதிய விடியலோடு, மகளிருக்கு பாதுகாப்பான அதிமுக ஆட்சி அமைவதற்கு தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.