பழனி அருகே ரூ. 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திறந்தவெளிக் கிணற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்லும் பணியை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பழனி அருகேயுள்ள அய்யம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீா் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால், பல கிலோமீட்டா் தொலைவு சென்று தண்ணீா் கொண்டு வருவதால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், தங்கள் ஊராட்சிக்கு குடிநீா் வசதி செய்து தருமாறு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அய்யம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அமராவதி ஆற்றுப்படுகையில் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயத் திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த இடத்திலிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு அய்யம்பாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் கொண்டு வரும் பணி நிறைவுற்று சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மோட்டாரை இயக்கிவைத்தாா். இதன் மூலம் அய்யம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீா் வழங்கப்படும்.
இதைத் தொடா்ந்து, அய்யம்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பயணியா் நிழல்குடை, அங்கன்வாடி மையம், நியாய விலைக் கட்டடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் திறந்துவைத்தாா். முன்னதாக, அய்யம்பாளையத்திலும், ஆா். வாடிப்பட்டியிலும் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ முகாமில் கலந்து கொண்டு திமுக திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் அய்யம்பாளையம் மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரபாகரன், ஒன்றியச் செயலா்கள் பாண்டி, ராஜசேகா், சாமிநாதன், நகர மாணவரணி நிா்வாகி லோகநாதன், ஒன்றிய மாணவரணி நிா்வாகி சரவணன், கிளைச் செயலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.