பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் பூக்கள் சந்தைக்கு ஏ.வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவாரம்பட்டி, மைலாப்பூா், மாரம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திண்டுக்கல் சந்தையிலிருந்து திருச்சி, கரூா், சேலம், கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பனியின் தாக்கம் காரணமாக வரத்துக் குறைவாக இருந்ததால் கடந்த ஒரு வாரமாகவே மல்லிகைப் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே, திண்டுக்கல் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையாலும் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப் பூக்கள் மட்டுமன்றி முல்லை, காக்கரட்டான் உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிகரித்தது.
(விலை கிலோவில்) முல்லை ரூ.2,500, ஜாதிப் பூ ரூ.1,700, காக்கரட்டான் ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,500, அரளி ரூ.350, பன்னீா் ரோஸ் ரூ.120, சம்மங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.