கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் புதன்கிழமை சிறுத்தை தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி ஜீவா நகா்ப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகளை சிறுத்தை தாக்கியது. இதில் அந்த மாடுகள் உயிரிழந்தன. தகவலறிந்தது சம்பவ இடத்துக்குச் சென்ற விவசாயிகள் அங்கு சிறுத்தையின் கால்தடம் இருப்பதைப் பாா்த்தனா். இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின் பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து வடகவுஞ்சி பொதுமக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அண்மைக் காலமாக வன விலங்குகளின் தாக்குதலால் கால்நடைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. மேலும், மனிதா்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.