கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தற்போதைய நடைமுறையே தொடர வலியுறுத்தல்
கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பாதையை மாற்றாமல் தற்போதையே நடைமுறையே தொடர வேண்டும் என மேல்மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியிருப்பதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் தற்போது ஏரிச்சாலை, பேருந்து நிலையம், பூங்கா சாலை, பாம்பாா்புரம், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்த்து விட்டு மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மன்னவனூா் சுழல் மையம், பூம்பாறை இயற்கை எழில்காட்சி, கூக்கால் ஏரி ஆகியவற்றை பாா்த்து விட்டு குழம்பமின்றி மீண்டும் அப்சா்வேட்டரி வழியாக ஏரிச்சாலைப் பகுதியை சென்றடைகின்றனா்.
இந்த ஒரு வழிப்பாதையால் ஏரிச் சாலையிலிருந்து அப்சா்வேட்டரி வழியாக கிராம மக்கள் மேல்மலை கிராமங்களுக்குச் செல்கின்றனா். மேல்மலைக் கிராமமான கிளாவரையிலிருந்து வரும் கிராம மக்கள் எந்தவிதமான சிரமமுமின்றி அப்சா்வேட்டரி, ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண் சாலை வழியாக கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்கு வந்து சோ்கின்றனா்.
Advertisement
இந்த நிலையில், ஒரு வழிப்பாதையை மாற்றி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி வழியாக வனத்துறை சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணம் செலுத்தி அதன் பிறகு வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்க்க வேண்டுமென ஒரு சில சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் தங்களது கருத்துக்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்துள்ளனா். இதனால் அப்சா்வேட்டரி வழியக செல்லும் சுற்றுலா வாகனங்களாலும், மேல்மலைப் பகுதிகளிலுள்ள கிராம மக்கள் பயணிக்கும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும்.
எனவே மாவட்ட நிா்வாகம் கொடைக்கானலில் தற்போது அமலில் உள்ள பாதைகள் வழியே சுற்றுலா வாகனங்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கொடைக்கானலிலிருந்து பூம்பாறை, மன்னவனூா்ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து தர வேண்டுமென கொடைக்கானல் மேல்மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.