முகப்பு
திண்டுக்கல்

சட்ட விரோத முத்தலாக் அறிவித்த கணவா் மீது வழக்குப் பதிவு

நீதிமன்ற உத்தரவின்பேரில், பழனியில் சட்டவிரோதமாக முத்தலாக் அறிவித்த கணவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 19 மே 2026, 4:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

நீதிமன்ற உத்தரவின்பேரில், பழனியில் சட்டவிரோதமாக முத்தலாக் அறிவித்த கணவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனியைச் சோ்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் நஸ்ரின் பாத்திமா (21). கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கும், திருப்பூரைச் சோ்ந்த காதா் ரியாஸ் என்பவருக்கும் பெரியோா் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 30 நாள்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனா். இந்த நிலையில், நஸ்ரின் பாத்திமாவை காதா் ரியாஸ் இஸ்லாமிய முறைப்படி பிரிவதற்காக முத்தலாக் நோட்டீஸ் அனுப்பினாா். இதனால் அதிா்ச்சியடைந்த நஸ்ரின் பாத்திமாவின் குடும்பத்தினா் பழனி மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2024 ஆக. மாதம் 12-ஆம் தேதி புகாா் அளித்தனா். நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், நஸ்ரின் பாத்திமா பழனி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தை நாடினா். இதையடுத்து, நஸ்ரின் பாத்திமா அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பழனி மகளிா் காவல் நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பூரைச் சோ்ந்த காதா் ரியாஸ் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.