மதுரை

மதுரையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நிரம்பி "வழியும்' சாலைகள்! அரசியல்வாதிகள்-அதிகாரிகள் பையை நிரப்பும் வாடகைப் பணம்

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஜெயப்பாண்டி

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
  மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர கடைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான சாலையோர பெட்டிக் கடைகள்  2007 ஆம் ஆண்டு வரை அனுமதிக்கப்பட்டன. அதன்படி, 512 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு மாதம் ரூ. 500 முதல் ரூ. 750 வரை வாடகை. நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகனப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 2007-க்கு பிறகு சாலையோர பெட்டிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.   
   ஆனால், இப்போது பனகல் சாலை, அண்ணா பேருந்து நிலையம், விளக்குத் தூண், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், புதூர் பகுதிகள், அழகர்கோவில் சாலை முதல் நீதிமன்றம் வரை, மாசி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் திருப்பரங்குன்றம் சாலை, காளவாசல், தேனி சாலை என கண்ணில்பட்ட இடங்களில் எல்லாம் எண்ணி முடியாத அளவுக்கு பெட்டிக் கடைகள் முளைத்துள்ளன.
   மாநகராட்சிப் பகுதியில் சில சாலைகள் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ளன. அச்சாலையோரங்களில் கடைகள் அமைக்க வேண்டும் என்றால், அத்துறையின்  அனுமதி பெறுவதற்கு மாநகராட்சியின் தடையில்லா சான்று அவசியம். ஆனால், தமுக்கம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை, மதிச்சியம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கட்டடச் சுவர்களை ஒட்டி ஏராளமான பெட்டிக் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த கடைகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு விண்ணப்பத்தில், மாநகராட்சி அனுமதித்ததுபோல போலியான ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. இதில், சில மாநகராட்சி அலுவலர்களின் கையெழுத்தும் உள்ளது. பல கடைகளுக்கு ஒரே கடை எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
   இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் மதிச்சியத்தைச் சேர்ந்த சையதுபாபு புகார் அளித்துள்ளார். மாநகராட்சி மண்டல சந்தைக் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோருக்கு தெரியாமல் இந்த விதிமுறை மீறல் எப்படி நிகழ்கிறது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 வருவாய் இழப்பு: மதுரையில் மாட்டுத்தாவணி, காய்கறிச் சந்தை உள்ளிட்ட கட்டடங்களில் 2,220 கடைகள் மற்றும் 2,329 தரை வாடகைக் கடைகள் உள்பட மாநகராட்சியின் கணக்கில் தற்போது 5,063 கடைகள் காட்டப்படுகின்றன. ஆனால், நிரந்தரக் கட்டடங்களில் உள்ள கடைகள் மட்டுமே பொது ஏலத்தில் விடப்படுகின்றன. தரை வாடகைக் கடைகள் மொத்தமாக ஏலம் விடப்பட்டு, மாதம் ரூ. 1 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ. 12 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
  விதிமுறைப்படியான கடை வாடகையில் 80 சதவிகிதமே வசூலிக்கப்படுகிறது. மேலும், அனுமதியின்றி பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் முளைத்துள்ள நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளின் பல லட்ச ரூபாய் வாடகையானது, அந்தந்தப் பகுதி மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பையை நிரப்புவதாக புகார் எழுந்துள்ளது.
  இது குறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியது:
   மாட்டுத்தாவணியில் ஆக்கிரமிப்பு  கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் அங்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.  மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
  தேவைப்பட்டால் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT