மதுரை

அவசர உதவி எண் 100-இல் அழைப்பை ஏற்க மறுப்பு: 3 சிறப்பு சார்பு- ஆய்வாளர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் : மாநகரக் காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை

DIN

மதுரை நகரில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-இல் பொதுமக்கள் அழைப்பை ஏற்க மறுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த 3 சிறப்பு சார்பு-ஆய்வாளர்கள் மற்றும் 2 தலைமைக் காவலர்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் காவல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்களின் அவசர உதவிக்காக இங்கு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். காவல்துறையின் உதவித் தேவைப்படும் பொதுமக்கள் 100-க்கு அழைப்பு விடுத்தால், பணியில் இருக்கும் காவலர்கள் அழைப்பை ஏற்று, பொதுமக்களின் புகார்களை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குத் தெரிவிப்பது வழக்கம்.
 மேலும் குற்றச்சம்பவங்கள், வழிப்பறி, சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் 100-க்கு தகவல் தெரிவித்து போலீஸாரின் உதவியைப் பெற்று வருகின்றனர். நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதச் சம்பவங்கள் தொடர்பாகவும், விபத்துகள் குறித்தும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்கப்படும். பொதுமக்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் இடையே காவல் கட்டுப்பாட்டு அறை பாலமாக செயல்பட்டு வந்தது.    இந்நிலையில், சமீப காலமாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு பொதுமக்கள் அழைப்பு விடுத்தால் அழைப்பை காவலர்கள் எடுப்பது இல்லை என்ற புகார் எழுந்தது.
மேலும் இரவு நேரங்களில் அவசரமாக காவல்துறையின் உதவியை நாடுவோரும் 100-க்கு அழைப்பு விடுத்தபோது எடுக்க மறுப்பதாக மாநகரக்காவல் ஆணையர் சைலேஷ்குமாருக்கு புகார் சென்றது.
 அதன்பேரில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பவர்கள் அலட்சியமாக செயல்பட்டு பொதுமக்களின் அழைப்பு ஏற்க மறுத்தது தெரியவந்தது.
 இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு-ஆய்வாளர்கள் மாதவன், சையது அப்துல்காதர், சந்திரபாண்டி ஆகிய மூவர் மற்றும் தலைமைக் காவலர்கள் வடிவேல் முருகன், கணேசன் ஆகிய இருவர் உள்பட 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். மேலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பாளராக இருந்த சார்பு- ஆய்வாளர் தெய்வ குஞ்சரியையும் அவனியாபுரம் காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 பணியில் அலட்சியமாக செயல்பட்ட 5 பேரை ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மாநகர காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் மாநகரக் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT