மதுரை

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் காலூன்றி விட்டது பாஜக

DIN

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வளர்ந்துள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் விஜயாரத்கர் கூறினார்.
மதுரை அருகேயுள்ள யானைமலை ஒத்தக்கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாஜக மாநில மகளிரணி மாநாடு "தமிழ்மகள் தாமரை' எனும் பெயரில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில மகளிரணித் தலைவர் ஏ.ஆர். மகாலட்சுமி தலைமை வகித்தார். மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
மாநாட்டில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் விஜயாரத்கர் பேசியது: 
தமிழகத்தில் பாஜக எங்கே உள்ளது எனக் கேட்டவர்களுக்கு பதில் கூறும் வகையில் பாஜகவின் வளர்ச்சியை நிரூபித்துள்ளது இந்த மாநாடு. மகளிரணி மாநாட்டைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர், இளைஞர் பிரிவு மாநாடுகளும் நடத்தப்படும்.
தமிழக அரசியலில் திமுக, அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தற்போது அவர்களுக்கு மாற்றாக மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக காலூன்றிவிட்டது. ஆகவே இனி தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு வேலையில்லை. 
தமிழக அரசியலை மகளிரே தீர்மானித்து வருகின்றனர். அவர்களை தமிழக அரசியல் கட்சிகள் நம்பியுள்ளன. தற்போது தமிழக மகளிர் பாஜகவுக்கு ஆதரவளித்து விட்டனர். எனவே வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக உறுப்பினர்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து அனுப்ப தமிழக பாஜகவினர் தயாராக வேண்டும். 
மகளிர் ஆதரவளிக்கும் கட்சிகள் தேர்தலில் தோற்காது. ஆகவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மகளிர் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார். 
தீர்மானங்கள்: கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கும், சிறுமியர் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை சட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது. பெண்கள் அதிகளவில் உயர்கல்வி கற்கும் வகையில் கட்டணச் சலுகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்காக நெடுந்தூரப் பயணப் பேருந்து இயக்க வேண்டும். பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு வயதை ஐந்தாண்டுகள் உயர்த்த வேண்டும். மகளிர் பாதுகாப்புக்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் மகளிரணி தேசியச் செயலர் விட்டோரியா கெளரி, மாநிலப் பொதுச்செயலர் வானதி சீனிவாசன், சிறுபான்மையினர் பிரிவு முனைவரி பேகம், உமாரதிராஜன் உள்ளிட்டோர் பேசினர். கரகாட்டம், தப்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் டி.எஸ்.ராதிகா வரவேற்றார். கார்த்திகாயிணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT