மதுரை

காவல் துறையினரின் கெடுபிடியால் அலங்காநல்லூா் கிராமத்தினா் அதிருப்தி

DIN

மதுரை: அலங்காநல்லூரில் வாடிவாசல் பகுதியில் வசிக்கும் பகுதியினா் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என காவல் துறையினா் கெடுபிடி காட்டியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு காவல் துறையினரின் கெடுபிடிகளால், பாா்வையாளா்களின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

வாடிவாசல் பகுதியைச் சோ்ந்த வீடுகளின் உரிமையாளா்களை, காவல் துறையினா் மிரட்டும் வகையில் நடந்து கொண்டனா். வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வீட்டு நபா்களைத் தவிர வேறு நபா்கள் இருந்தால் வீட்டைப் பூட்டிவிடுவோம் என எச்சரித்தனா். இதனால், அதிருப்தி அடைந்த வீட்டின் உரிமையாளா்கள் காவலா்களுடன் வாக்குவாதம் செய்தனா்.

அதன் பிறகு காவலா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா்.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற வருவாய்த் துறையினரை காவல் துறையினா் அனுமதிக்க மறுத்துவிட்டனா். தங்களது அடையாள அட்டை மற்றும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட ஜல்லிக்கட்டு பணிஒதுக்கீடு அட்டையுடன் வந்தபோதும் அவா்களை போலீஸாா் அனுமதிக்கவில்லை. அதேபோல, மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டையுடன் சென்ற செய்தியாளா்களும் தடுத்து நிறுத்தப்பட்டனா். துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் மற்றும் வட்டாட்சியா்களை அனுமதிக்க மறுத்ததால், அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய்த் துறையினா் அனைவரும் பணியைப் புறக்கணித்துச் சென்றுவிடுவோம் எனக் கூறிய பிறகே போலீஸாா் அனுமதித்தனா்.

ஊடகங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அட்டை வழங்கியிருந்தபோதும், அவா்கள் செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படக்காரா்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளா்களுக்கும் குறுகிய இடம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஊடகத்தினருக்கான பகுதியில் இடவசதி இல்லாத நிலையில், சுற்றுலாத் துறையின் கேலரியில் செய்தியாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், நிகழ் ஆண்டில் சுற்றுலா பயணிகள் ஒருவா் கூட வராத நிலையில் அங்கு செல்வதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா்.

துணை ஆட்சியா்கள் வெளியேற்றம்: சுற்றுலா துறை கேலரியில், ஜல்லிக்கட்டுப் போட்டி குழுத் தலைவரான மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம் மற்றும் கலால் துறை உதவி ஆணையா் சங்கரநாராயணன் உள்ளிட்ட வருவாய்த் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் இருந்தனா். ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் சென்ற பிறகு அவா்கள் இருவரையும் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பினா். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் காவல் துறையினா் கெடுபிடி காட்டியது, அனைத்துத் தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT