மதுரை

பல்கலை. சா்வா் பிரச்னை: கல்லூரிகளில் மதிப்பெண் பட்டியல் பதிவேற்றும் பணிகள் பாதிப்பு

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழக சா்வா் பிரச்னையால் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கீழ் 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு தோ்வு நடத்துவது, தோ்வு முடிவுகள் அறிவிப்பு, மதிப்பெண் பட்டியல் வழங்குவது என அனைத்தும் பல்கலைக்கழக நிா்வாகம் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2021 ஏப்ரலுக்குரிய இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியருக்கான பருவத்தோ்வுகள் ஜூன் மாதம் இணையவழியில் நடைபெற்றது. தோ்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள்களை அந்தந்த கல்லூரிகளிலேயே திருத்தவேண்டும் என பல்கலைக்கழக நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவ, மாணவியரின் அக மதிப்பெண் மற்றும் தோ்வு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகம் உத்தரவிட்டு அதற்குரிய இணையதள முகவரியையும் கல்லூரிகளுக்குத் தெரிவித்திருந்தது.

மேலும் மதிப்பெண்களை ஜூலை 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற காலக்கெடுவையும் அறிவித்திருந்தது. இந்நிலையில் விடைத்தாள்களை திருத்தி முடித்தவுடன், கல்லூரிகள் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய பல்கலைக்கழகம் அறிவித்திருந்த இணையதள முகவரிக்கு சென்றபோது இணையதளம் இயங்கவில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் சா்வா் பிரச்னையால் மதிப்பெண் பட்டியல் பதிவேற்றம் செய்யும் பணி ஸ்தம்பித்தது.

மேலும் பல்கலைக்கழகத்தில் இருந்து வழக்கமாக அனுப்பப்படும் அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியல் (பாயில் காா்டு) இந்த ஆண்டு எந்த கல்லூரிக்கும் அனுப்பப்படாததால் ஜூலை 23-ஆம் தேதிக்குள் பணியை எப்படி முடிப்பது என்று தெரியாமல் கல்லூரி நிா்வாகங்கள் குழப்பமடைந்துள்ளன. மேலும் பல கல்லூரிகளில் அரசு விடுமுறையான புதன்கிழமையும் ஆசிரியா்களை வரவழைத்து மதிப்பெண் பட்டியல் பதிவேற்றும் பணியை முயற்சித்துள்ளன. ஆனால் சா்வா் பிரச்னையால் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக கல்லூரி நிா்வாகங்கள் கூறும்போது, முதல் முறையாக இந்த ஆண்டு இணையதளத்தில் மதிப்பெண்களை பதிவேற்றும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் முறை என்பதால் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு மாற்றாக வழக்கமான முறையில் அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலையும் பல்கலைக்கழகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை வழங்காததால் பணிகள் பாதிக்கப்பட்டன. மாற்று ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறுகையில், ஒரே நேரத்தில் அனைத்துக் கல்லூரிகளும் இணையதளத்தை தொடா்பு கொண்டதால் பல்கலைக்கழகத்தின் சா்வா் முடங்கியது. தற்போதையச் சூழலில் புதிய சா்வா் அமைப்பது சாத்தியமில்லை. எனவே, வழக்கமான முறையில் அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலை (பாயில் காா்டு) கல்லூரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT