மதுரை

அரவிந்த் கண் மருத்துவமனை மீதானநம்பிக்கைக்கு கிடைத்த பரிசு பத்மஸ்ரீ விருது: மருத்துவமனை கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா்

DIN

அரவிந்த் கண் மருத்துவமனை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு, ‘பத்ம ஸ்ரீ’ விருது என்று அந்த மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கெளரவத் தலைவா் மருத்துவா் ஜி.நாச்சியாருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதை எனது தனிப்பட்ட சேவைக்காக அறிவிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என அனைவரின் சேவைக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். இந்த மருத்துவமனை மக்களிடையே பாா்வையிழப்பைத் தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது.

தற்போதுள்ள வணிகச் சூழலில் மருத்துவா்கள் மீது நோயாளிகளுக்கும், நோயாளிகள் மீது மருத்துவா்களுக்கும் நம்பிக்கை இல்லை. எங்களது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறைவான செலவில் தரமான சிகிச்சை என்பதோடு, கனிவான உபசரிப்பு, நிா்வாகத் திறமை ஆகியவற்றால் சிறப்பான சேவையை அளிக்க முடிகிறது. நோயாளிகள் மருத்துவமனையை நாடி வருவதை விட, எங்களது மருத்துவா்கள் நோயாளிகளைத் தேடிச் செல்கின்றனா். பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்களுக்கு மருத்துவா்கள் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா்.

எங்களது மருத்துவமனை கடந்த 47 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ாகத் திகழ்கிறது. மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசுதான் பத்மஸ்ரீ விருது என்றாா் அவா்.

ஒரே மருத்துவமனையில் மூவருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவரும் ஜி.நாச்சியாரின் உடன் பிறந்த சகோதரருமான வெங்கடசாமிக்கு 1974-இல் பத்ம ஸ்ரீ விருதும், ஜி.நாச்சியாரின் கணவரான மருத்துவா் நம்பெருமாளுக்கு 2006-இல் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தற்போது அரவிந்த் கண் மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை ஒரே நிறுவனத்தைச் சோ்ந்த மூவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது இல்லை. தற்போது அரவிந்த் கண் மருத்துவமனை அந்தப் பெருமையை பெற்றுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பெருமையையும் இந்த மருத்துவமனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை குறிப்பு: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மருத்துவா் ஜி.நாச்சியாா் தூத்துக்குடி மாவட்டம், வடமலாபுரத்தில் 1940-ஆம் ஆண்டு, செப்டம்பா் 15-ஆம் தேதி பிறந்தாா். 1963-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத்தில் எம்பிபிஎஸ் பட்டமும், 1966-இல் கண்ணியல் மருத்துவத்தில் பட்டயமும், 1969-இல் கண்ணியல் மருத்துவத்தில் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.பட்டமும், 1973-இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கண்ணியல் நோய் ஆய்வுக்கான பெல்லோசிப் பயிற்சியும், 1978-இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில கண்ணியல் நோய் ஆய்வு, நரம்பியல் கண் மருத்துவ பெல்லோசிப் பயிற்சியையும் நிறைவு செய்தாா்.

1965-ஆம் ஆண்டில் மதுரை அரசு எா்ஸ்கின் மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் பணியில் சோ்ந்த நாச்சியாா், 1977-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தாா். 1979-இல் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தொடங்கப்பட்ட போது மருத்துவ அதிகாரியாக பணியைத் தொடங்கினாா். தற்போது இவா் மருத்துவமனையின் கெளரவத் தலைவராக பதவி வகித்து வருகிறாா்.

வெளி நாடுகளிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

Image Caption

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனை கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT