மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு தலைமைச் செயலா், ஏடிஜிபி காணொலியில் முன்னிலை

Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததையடுத்து தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை காணொலி வாயிலாக முன்னிலையாகினா்.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி கோயில் நிா்வாகம் சாா்பில் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

இருப்பினும், தீப காா்த்திகைத் திருநாளான கடந்த 3-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரா் மலை ஏற காவல் துறையினா் அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் காணொலி வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் நேரிலும் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.

இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விலக்கு அளிக்க மறுத்து உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்த நீதிமன்ற அமவதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் புதன்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலா் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் காணொலி மூலமும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், உதவி ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் நேரிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளித்தனா்.

தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உள்பட்டே பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தலைமைச் செயலா் விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்திலும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே கட்டப்பட்டு வரும் தேவாலய விவகாரத்திலும் அலுவலா்களே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதை அரசுத் துறையினா் செய்யத் தவறியதாலேயே பாதிக்கப்பட்ட நபா் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரினாா். ஆனால், இதுதொடா்பாக நீதிமன்றம் அளித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டுவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுத்தும் முயற்சியாகவே தோன்றுகிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தின் மேலமைப்பு தடை உத்தரவு, ரத்து உத்தரவு பிறப்பிக்காத நிலையில், உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு அரசுத் துறை அலுவலா்கள் உரிய பதில் அளிக்க வேண்டியது கட்டாயம். அரசு அலுவலா்களின் இத்தகைய போக்கு அரசமைப்பு இயந்திரத்தை முடக்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் பொறுப்பான நிலைப்பாட்டை மேற்கொள்வாா் என நீதிமன்றம் கருதுகிறது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜன. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் அப்போது நேரில் முன்னிலையாகி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT