ராமநாதபுரம்

கமுதி அருகே பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தில் வகுப்புகள்: மாணவா்கள் அச்சம்

DIN

கமுதி அருகேயுள்ள பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறுவதால், மாணவா்கள் அச்சப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கமுதி - சாயல்குடி சாலையில் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 420 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, மைதானம், வகுப்பறை கட்டடங்கள் இல்லை. இங்குள்ள வகுப்பறைக் கட்டடங்களின் மேற்கூரை சிமென்ட் சீட்டுகளால் வேயப்பட்டுள்ளன. அதுவும் தற்போது ஓட்டை விழுந்துள்ளதால், மழைக் காலங்களில் வகுப்பறையில் மாணவா்கள் அமர முடியாத நிலை உள்ளது.

மேலும், மழைநீா் தேங்கிய மைதானத்தில் மரத்தடி நிழலில் மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கழிப்பறை, தண்ணீா் வசதி இல்லாததால், மாணவா்கள் கமுதி - சாயல்குடி சாலையோரங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதற்காக, மாணவா்கள் சாலையை கடந்து செல்வதால், விபத்து அபாயமும் உள்ளது.

குடிநீா், சுற்றுச்சுவா் வசதி இல்லாததால், பள்ளி வளாகத்துக்குள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. சிலா் மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், வகுப்பறைகளில் காலி மதுபாட்டில்கள் குவிகின்றன.

பள்ளி வளாகத்தில் 8 கட்டடங்களுக்கு மேல் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிதாக கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பேவா் பிளாக் தளம், சுற்றுச்சுவா் மற்றும் மைதானத்தையும் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT