ராமநாதபுரம்

குடிநீர் பிரச்னை: கமுதி பகுதியில் தொடர் போராட்டங்கள்

DIN

கமுதி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      கமுதி அருகேயுள்ள பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500  மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால், மாணவர்கள் சாலையைக் கடந்து சென்று குடியிருப்புகளில் குடிநீர் பெறுகின்றனர். இதனால், விபத்து அபாயம் உள்ளதால், பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் இப்பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
      இதனால் பேரையூர்-முதுகுளத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வருவாய்த் துறையினர் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
     இதேபோல், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்துக்கு, காவிரி கூட்டுக் குடிநீர் மற்றும் ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இந்த குடிநீரை சிலர் மோட்டார்களை பயன்படுத்தி திருடுகின்றனர். இதனால், கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. 
      இதன் காரணமாக, பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மோட்டார்கள் மூலம் குடிநீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, பசும்பொன் கிராம மக்கள் காலிக் குடங்களுடன், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
      இதையடுத்து, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் (கிராம ஊராட்சிகள்) போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மோட்டார்கள் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அனைவருக்கும் குடிநீரை சீராக விநியோகிப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT