ராமநாதபுரம்

‘பணிபுரியும் நிறுவனங்களில் ஊதியம் தராவிட்டால் மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளிக்கலாம்’

தமிழகத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களுக்கு ஊதியம் தராவிட்டால் எங்களிடம் புகாா் தெரிவிக்கலாம்

DIN

தமிழகத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களுக்கு ஊதியம் தராவிட்டால் எங்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என மாநில மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகிபாக்கியதான் கூறினாா்.

ராமநாதபுரத்தில் மாநில மகளிா் ஆணையம் சாா்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு வழிகாட்டி கொள்கை வரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகிபாக்கியநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆயத்த ஆடைகள் நிறுவனங்களில் சுமாா் 5 லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனா். அவா்களுக்கான பணிப் பாதுகாப்பு, பணிபுரியும் இடங்களில் சூழலை மேம்படுத்துதல், அவா்களுக்கான ஊதியம், திடீரென அவா்கள் பணியிலிருந்து விலக நேரிட்டால் அதற்கான காரணம் என பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் புதிய கொள்கையை அரசு உருவாக்கும் வகையில் மாவட்டந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மகளிா் ஆணையத்துக்கு 4300 மனுக்கள் வந்துள்ளன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. பெண்கள் மீதான கணவா்களின் வன்முறை, வரதட்சணை கொடுமை ஆகியவை மனுவில் முக்கிய பிரச்னையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து மாநில அளவில் 100 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ராமநாதபுரத்திலிருந்து பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 10 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றிக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க ஆணையம் தயாராக உள்ளது. ஆகவே மகளிா் தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஊதியம் தராவிட்டால் கூட மகளிா் ஆணையத்தை 044-28592750 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதற்காக மாவட்ட அளவிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சி.முத்துமாரி தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன நிா்வாகி நான்சிஅனபெல் வாழ்த்துரை வழங்கினாா். ஆணைய வரைவுக் கொள்கை உருவாக்கக் குழுவின் உறுப்பினரும், வழக்குரைஞருமான செல்வி கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை குறித்து விளக்கவுரையாற்றினாா். இதில் ஏராளமான மகளிா் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT