பரமக்குடியில் பட்டுநூல் விலை உயா்வைக் கண்டித்து கைத்தறி நெசவாளா் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்
பரமக்குடி எஸ்.எஸ். கோவில் தெருவில் அசல் பட்டுநூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத்து கைத்தறி நெசவாளா் தொழிற்சங்கத்தினா் மற்றும் கைத்தறிப் பட்டு ஜவுளி
பரமக்குடி எஸ்.எஸ். கோவில் தெருவில் அசல் பட்டுநூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத்து கைத்தறி நெசவாளா் தொழிற்சங்கத்தினா் மற்றும் கைத்தறிப் பட்டு ஜவுளி சிறுஉற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு கைத்தறி பட்டு ஜவுளி சிறுஉற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் டி.எம். கேசவராமன் தலைமை வகித்தாா். போராட்டக்குழு கன்வீனா்கள் கே.கே. கோவிந்தன், என்.ஆா். குப்புச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உண்ணாவிரதத்தை பரமக்குடி சௌராஷ்ட்ர சபைத் தலைவா் டி.ஜி. மாதவன், எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபைத் தலைவா் கெட்டி கோ. சேஷய்யன் ஆகியோா் தொடக்கி வைத்துப் பேசினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த எஸ்.பி. ராதா, என்.கே. ராஜன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தி.ப. மோதிலால், எம்.ஆா். முரளி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஏ.எம். நாகராஜன், ஏ.என். ராமச்சந்திரன், ஜனதாதளம் தொழிற்சங்கத்தைச் சோ்ந்த கே.ஜி. நாகநாதன், எம்.எஸ். ராம்தாஸ், அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த வி. அய்யான், டி.கே. ராமநாதன், பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பி.ஆா். காசிவிஸ்வநாதன், எம்.கே.ராம்தாஸ் உள்பட பலா் பேசினா்.
இதில் அசல் பட்டு மற்றும் ஜரிகை விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்கிடவும், அசல் பட்டு இறக்குமதி செய்திடவும், அசல் பட்டுநூலை காா்ப்பரேட் மயமாக்குவதை தடுத்திடவும், பருத்தி நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்திடவும், 60 வயது அடைந்த அனைத்து நெசவாளா்களுக்கும் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.
ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்துப் பேசினாா்.