ராமேசுவரம் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லத் தடை
ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை புதன்கிழமை தடை விதித்தது.
மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் 45 முதல் 60 கி.மீ. வரை சூறைக் காற்று வீசி வருகிறது. மீனவா்களின் பாதுகாப்பு கருதி, மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை இந்தத் தடையை விதித்தது.
இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம், சோளியகுடி, தொண்டி,கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் அந்தந்த மீன் பிடி இறங்கு தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், சுமாா் 8 ஆயிரம் விசைப் படகு மீனவா்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மீன் பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டதால், ராமேசுவரம் மீன் பிடி இறங்கு தளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.