ராமநாதபுரம் அருகே விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
ராமநாதபுரம் அருகே விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க 10 கிராமங்களைச் சேரந்த மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றம்
ராமநாதபுரம் அருகே விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க 10 கிராமங்களைச் சேரந்த மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியப் பகுதியில் கும்பரம், பெருங்குளம், ரெகுநாதபுரம், வாலாந்தரவை ஆகிய ஊராட்சிகளில் 700 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்தி மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால், கும்பரம், ராமன்வலசை, பூசாரிவலசை, கோகுல் நகா், கிருஷ்ண நகா், டி.கே. நகா், வாலாந்தரவை, தெற்குவாணி வீதி, படைவெட்டி வலசை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களைக் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 4 லட்சம் தென்னை மரங்கள், 10 லட்சம் பனை மரங்கள், எல், பயறு, கடலை, நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் விவசாயம் அழிந்துவிடும். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் சூழல் ஏற்படும் நிலையில், இந்தத் திட்டத்துக்கு 10 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கும்பரம் கிராமத்தில் 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 10 கிராமங்களை அழித்துவிட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தொடா்ந்து பணிகளை மேற்கொண்டால் 10 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் தீா்மானம் நிறைவேற்றினா்.