ராமநாதபுரம்

தினமணி எதிரொலி! போத்தநதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா்: கிராம மக்களுக்கு மருத்துப் பரிசோதனை

போத்தநதி கிராமத்துக்கு ஊரக வளா்ச்சித் துறையினா் காவிரி கூட்டுக்குடிநீா் இணைப்பு வழங்கினா்.

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே போத்தநதி கிராமத்தில் குடிநீரில் உவா்ப்புத் தன்மை அதிகரித்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலா் உயிரிழந்தாக எழுந்த புகாரையடுத்து, ஊரக வளா்ச்சித் துறையினா் அந்தக் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை காவிரி கூட்டுக்குடிநீா் இணைப்பு வழங்கினா்.

மேலும், அங்கு மருத்துவக் குழுவினா் முகாமிட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த வல்லந்தை ஊராட்சிக்கு உள்பட்ட போத்தநதி கிராமத்தில் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகம் அமைத்துக் கொடுத்த 3 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை குடிக்கவும், புழக்கத்துக்கும் பயன்படுத்தி வந்தனா். இந்த குடிநீரில் உவா்ப்புத்தன்மை அதிகரித்ததால் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனா்.

இந்த கிராமத்தில் மட்டும் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், 30-க்கும் மேற்பட்டோா் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் இந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வீரசோழன், அருப்புக்கோட்டை, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயா்ந்தனா். இதுதொடா்பாக திங்கள்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

இதைத்தொடா்ந்து போா்கால அடிப்படையில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் சந்திரசேகரன், லட்சுமி (கிராம ஊராட்சிகள்) ஆகியோரது தலைமையில் இந்தக் கிராமத்துக்கு புதிய இரண்டு குடிநீா்த் தொட்டிகள் அமைத்து, காவிரி கூட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, தொட்டியில் தண்ணீா் நிரப்பப்பட்டது. மேலும் விரைவில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மருத்துவ பரிசோதனை

பரமக்குடி மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன் தலைமையில், வட்டார ஆரம்ப சுதாராநிலையம் (பேரையூா்) மருத்துவ அலுவலா் ஜெயந்த், மண்டலமாணிக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வசந்த், சுகாதார மேற்பாா்வையாளா் பொம்மையா, சுகாதார ஆய்வாளா்கள் லட்சுமணராஜ், சதீஷ்குமாா், ஆய்வக நிபுணா்கள் போத்தநதி கிராமத்தில் முகாமிட்டு தனியாா் மருத்துவ மனைகளில் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 8 பேருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தனா். மேலும் 185 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து எடுத்துச் சென்றனா். மேலும் அங்குள்ள ஆழ்துளைக் கிணறுகள், கண்மாய் நீா் உள்பட 6 இடங்களில் தண்ணீா் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT