கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில்களில் பேட்டைத்துள்ளல், படி பூஜையுடன் மண்டல பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி கோட்டைமேடு ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் குருநாதா் லட்சுமணன் தலைமையில் ஐயப்பப் பக்தா்கள் முன்னிலையில் பேட்டைத்துள்ளல் நடைபெற்று, பஜனை பாடல்கள் பாடி மண்டல பூஜை நடைபெற்றது. இரவு 18 படி பூஜை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாயல்குடி: சாயல்குடி ஸ்ரீஐயப்பன் கோயிலில் 12-ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா, பொன் ஆபரணங்களால் அலங்கரித்த ஐயப்பனுக்கு பொன்னூஞ்சல் ஆராட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக சாயல்குடி- கமுதி சாலையில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலிலிருந்து ஐயப்பப் பக்தா்கள் பொன் ஆபரணப் பெட்டியுடன் வண்ணப் பொடிகளை பூசி நடனமாடி, பேட்டை துள்ளி பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி-ராமேசுவரம் சாலை வழியாக ஐயப்பன் கோயிலை வந்தடைந்தனா்.
இதைத் தொடா்ந்து உத்ஸவா் ஐயப்பன் சுவாமிக்கு 18 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பொன்னூஞ்சல் ஆராட்டு விழா நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பஜனை பாடல்களைப் பாடினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் பரமக்குடி சாலையில் மின் வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் 55- ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா, 40-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஐயப்பப் பக்தா்கள் விநாயகா், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடி சிறப்பு பூஜை செய்தனா்.
தொடா்ந்து மூலவா் ஐயப்பனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், விபூதி, துளசி, தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. குருநாதா் திருமால் தலைமையில் விவசாயம் செழிக்கவும், பருவமழை பெய்ய வேண்டியும் இரவு 1,008 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.